குருத்தோலை ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்த டெல்லி காவல்துறை - கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்!
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாள்கள் தவக்காலமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. தவக்காலத்தின் தொடக்கமான சாம்பல் புதனையொட்டி கடந்த மார்ச் 5 ஆம் தேதி தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து இயேசுவின் பாடுகளை நினைவு கூறும் விதமாக சிலுவைப்பயணத்தை கிறித்தவர்கள் மேற்கொண்டனர்.
இந்நிலையில் இன்று(ஏப்ரல்.13) பல்வேறு முக்கிய தேவாலயங்களில் குருத்தோலை ஊர்வலம் நடத்தி கிறிஸ்தவர்கள் வழிபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் டெல்லி புனித ஹார்ட் ஆலயத்தில் சேக்ரட் ஹார்ட் தேவாலயம் வரை குருத்தோலை ஊர்வலம் செல்ல காவல்துறையினரிடம் தேவாலயத்தைச் சேர்ந்தவர் அனுமதி கேட்டுள்ளனர். அதற்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்தனர். இருப்பினும், தேவாலயத்திற்குள் ஒரு ஊர்வலம் நடைபெறும் என்று தேவாலயம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பாதுகாப்பை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டதாக காவல்துறை விளக்கம் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் குருத்தோலை ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த டெல்லி காவல்துறைக்கு கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், டெல்லி புனித ஹார்ட் ஆலயத்தில் குருத்தோலை ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்த டெல்லி காவல்துறையின் நடவடிக்கை கண்டத்துக்குரியது. அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள மத சுதந்திரம் மற்றும் மதச்சார்பற்ற விழுமியங்களை மீறுவதாகவும் சிறுபான்மையினரின் மத நம்பிக்கைகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும் உள்ள இத்தகைய நடவடிக்கைகள் பன்முக சமூகத்திற்கு ஏற்றதல்ல”
இவ்வாறு முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.