டெல்லி மதுபான கொள்கை வழக்கு - கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு!
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதான கவிதாவுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதில் தொடர்புடையதாக தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகா் ராவின் மகளும், பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) தலைவர்களில் ஒருவருமான கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 15-ந்தேதி கைது செய்தனர்.
இந்த வழக்கில் கவிதாவை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா அனுமதி வழங்கியிருந்தார். இதன்படி கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். இதனையடுத்து அவர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
கவிதா இடைக்கால ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சி.பி.ஐ. அதிகாரிகளும் இந்த வழக்கை விசாரித்து வருவதால் அவர்களும் கடந்த 6-ந் தேதி டெல்லி திகார் ஜெயிலில் இருக்கும் கவிதாவை சிறையிலேயே விசாரணை நடத்த அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து ஒரு பெண் போலீஸ் மற்றும் கவிதாவின் வழக்கறிஞர் முன்னிலையில் டெல்லி திஹார் சிறையில் கவிதாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால் டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதான கவிதா விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார் என சிபிஐ தெரிவித்தது.
இதையும் படியுங்கள் : ஐநாவின் யுனிசெப் அமைப்பில் இடம் பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி வினிஷா உமாசங்கர்!
இந்நிலையில், கவிதா தரப்பில் இடைக்கால ஜாமீன் வழங்கும்படி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா முன் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், இவருக்கு ஜாமின் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகிய இரண்டு கைதுகளுக்கு எதிராகவும் ஜாமின் கேட்டு மனுவில் தெரிவித்திருந்தார். ஆனால் இரண்டு வழக்குகளுக்கும் ஜாமின் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.