அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை ED காவல் - டெல்லி நீதிமன்றம் உத்தரவு!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 28-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார்.
இதற்கிடையில் 12 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர், நேற்று கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கெஜ்ரிவாலை நேற்றிரவு அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து கெஜ்ரிவால், இன்று (மார்ச் 22) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், "சிறையில் இருந்தாலும் வெளியே இருந்தாலும் என் வாழ்க்கை நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து அமலாக்கத்துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்வி ராஜூ ஆஜராகி, “டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கெஜ்ரிவாலுக்கு நேரடி தொடர்பு உள்ளது. இந்த புதிய மதுபான கொள்கையை நடைமுறைப்படுத்தியதிலும், சவுத் குரூப்புக்கு ஆதரவாகவும் கெஜ்ரிவால் செயல்பட்டுள்ளார். அதனால் 10 நாட்கள் அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும்" என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
கெஜ்ரிவால் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனுசிங்வி ஆஜராகி, “ஆம் ஆத்மி கட்சியில் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட நான்கு முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் நேரடியான ஆதாரம் இல்லை. அதனால் இவர்களை அமலாக்கத்துறை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை” என்று வாதிட்டார்.
இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 28-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் மார்ச் 28-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு அவரை ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. கெஜ்ரிவாலை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை கோரிய நிலையில் 6 நாட்கள் மட்டும அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.