மார்ச் 12-க்கு பிறகு விசாரணைக்கு ஆஜராக தயார் - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்!
மார்ச் 12 ஆம் தேதிக்கு பிறகு காணொளி வாயிலாக விசாரணைக்கு ஆஜராக தயாராக இருப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறைக்கு பதில் அனுப்பியுள்ளார்.
டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் எழுந்த புகார் மீதான விசாரணையில் கலால் துறை அமைச்சராக இருந்த மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறை அவருக்கு 7 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர், 7 முறையும் ஆஜராகாமல் புறக்கணித்தார். இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை அவருக்கு 8 முறையாக சம்மன் அனுப்பியது.
இந்த நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறைக்கு கடிதம் மூலம் பதில் அனுப்பியுள்ளார். அதில், அமலாக்கத்துறையின் சம்மன் சட்டவிரோதமானது என்றாலும், அதற்கு பதிலளிக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். மார்ச் 12 ஆம் தேதிக்கு பிறகு விசாரணைக்கு ஆஜராக தயாராக இருப்பதாகவும், தேதியை தெரிவித்தால் காணொளி வாயிலாக விசாரணைக்கு ஆஜராவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.