டெல்லி சட்டப்பேரவை தேர்தல் - முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அதிஷி !
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இதில் கல்காஜி தொகுதியில் முதலமைச்சர் அதிஷி சிங் (43) ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் போட்டியிட்டார். இதனிடையே, தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது.
இதில் அதிஷி சிங் 52 ஆயிரத்து 154 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி 48ஆயிரத்து 633, காங்கிரஸ் வேட்பாளர் அல்கா லம்பா 4 ஆயிரத்து 392 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தனர். அதிஷிகடந்த 2020 சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகிய இருவரும் தோல்வி அடைந்தனர். இந்த சூழ்நிலையில், சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி சார்பில் அதிஷி முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், முதலமைச்சர் பதவியை அதிஷி சிங் ராஜினாமா செய்தார். இதற்காக அதிஷி சிங் துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
அர்விந்த் கேஜ்ரிவால், மணிஷ் சிசோடியா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது, ஆம் ஆத்மி கட்சியை வழிநடத்துவதில் அதிஷி முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.