"மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை கண்டிப்பாக கொண்டு வரமாட்டோம்'' - பிரதமர் மோடி!
''நான் உயிருடன் இருக்கும் வரை மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை கண்டிப்பாக கொண்டு வரமாட்டோம்'' என பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கியது. இதையடுத்து,13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 மக்களவை தொகுதிகளுக்கான 2ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற்றது. இறுதி மற்றும் 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறும் எனவும், ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தெலங்கானாவில் மே 13 வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில், தெலங்கானா மாநிலம் மேடாக்கில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது :
காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 55 சதவீத பரம்பரை சொத்து வரி விதிக்கப்படும் சூழல் உருவாகும். முந்தைய, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், மற்ற நாடுகள் எல்லாம் பொருளாதார ரீதியாக பலமான நாடாக மாறின. ஆனால், காங்கிரஸ் அரசின் தவறான கொள்கை காரணமாக நம் நாடு வளர்ச்சியில் பின் தங்கியிருந்தது.
காங்கிரஸ் ஓட்டு வங்கி அரசியல் செய்கிறது. மதரீதியில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம், அந்த கட்சியிடம் உள்ளது. ஆனால், நான் உயிருடன் இருக்கும் வரை, மதரீதியிலான இட ஒதுக்கீட்டை கண்டிப்பாக கொண்டு வரமாட்டோம்.
இவ்வாறு அவர் பேசினார்.