"டெல்லியில் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்" - இபிஎஸ் இரங்கல்!
உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி, மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறும் இந்நிகழ்வில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
இதில் பங்கேற்பதற்காக நேற்று (பிப்.15) இரவு டெல்லி ரயில்வே நிலையத்தில் அதிகளவில் பயணிகள் திரண்டிருந்தனர். இந்த சூழலில், அவர்கள் பயணிக்க வேண்டிய ரயில் வேறொரு தண்டவாளத்தில் வந்தால் பயணிகள் முந்திக்கொண்டு ரயிலில் ஏற முயன்றனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பெண்கள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இச்சம்பத்திற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள வேண்டி ரயிலைப் பிடிக்க அதிகளவில் பக்தர்கள் திரண்டதால் டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பயணிகள் உயிரிழந்துள்ளதாக வரும் செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோர் பூரண உடல் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்"
இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.