For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“சென்னை மற்றும் தென் மாவட்ட வெள்ளப் பாதிப்பை கடுமையான இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும்!” - பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை!

07:40 PM Jan 02, 2024 IST | Web Editor
“சென்னை மற்றும் தென் மாவட்ட வெள்ளப் பாதிப்பை கடுமையான இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும் ”   பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை
Advertisement

சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பை ‘கடுமையான இயற்கைப் பேரிடர்கள்' என அறிவித்து உரிய நிவாரண நிதி வழங்கிட வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை முன்வைத்துள்ளார். 

Advertisement

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் பிரதமர் நரேந்திர மோடியால் இன்று (02.01.2024) திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தமிழ்நாடு அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடியிடம் தமிழ்நாடு குறித்து முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழ்நாட்டு மக்களின் சார்பாகத் தமிழ்நாட்டின் நலனை முன்னிறுத்தி கோரிக்கைகள் வைத்தேன். அவற்றை நிச்சயம் பரிசீலித்து நிறைவேற்றித் தருவார் என்று நம்புகிறேன்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் வைத்த கோரிக்கைகள் பின்வருமாறு:

  • சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பை ‘கடுமையான இயற்கைப் பேரிடர்கள்' என அறிவித்து NDRF-இல் இருந்து உரிய நிவாரண நிதி வழங்கிட வேண்டும்.
  • சென்னை, திருச்சி, கோவை, மதுரை, தூத்துக்குடி, வேலூர் விமான நிலைய விரிவாக்க மற்றும் நவீனமயமாக்கல் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.
  • மதுரை விமான நிலையத்தைப் பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டும்.
  • சென்னை - பினாங்கு, சென்னை - டோக்கியோ இடையே நேரடி விமான சேவையைத் தொடங்கிட வேண்டும்.
  • சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கான ஒன்றிய அரசின் பங்களிப்பினை விரைந்து வழங்கிட வேண்டும்.
  • தமிழ்நாட்டில் NHAI (இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்) செயல்படுத்தி வரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
  • இருவழிச் சாலையாக மாற்றப்படுகிற நெடுஞ்சாலைகளுக்கும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
  • திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த MSME நிறுவனங்களுக்கு BHEL நிறுவனம் அதிக அளவில் procurement orders வழங்க வேண்டும்.

இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement