#CycloneUpdate | ஆட்டத்தை தொடங்கிய ஃபெஞ்சல் புயல்... சென்னையில் கொட்டி தீர்க்கும் மழை!
தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள 'ஃபெஞ்சல்' புயல் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (நவ.29) பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக வலுபெற்றது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கன மழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக மணிக்கு 50 முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் எதிரொலியாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நீர் சூழ்ந்துள்ளது. தொடர்மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது வேகமெடுத்துள்ளது. அதன்படி, ஃபெஞ்சல் புயல் 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
ஃபெஞ்சல் புயல் புதுச்சேரிக்கு கிழக்கே 150 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 140 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று (நவ.30) மாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.