டிட்வா புயல் : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்..!
தென்மேற்கு வங்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று புயலாக மாறி உள்ளது. இந்த புயலுக்கு " டிட்வா" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த டிட்வா புயல் தென்மேற்கு வங்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதி வழியாக வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நவம்பர் 30ம் தேதி அன்று அதிகாலைக்குள் வட தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கரையை வழியாக கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
”டிட்வா புயல் பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்க 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன்.
16 SDRF படைகளும் 12 NDRF படைகளும் கடுமையான மழைப்பொழிவு ஏற்படக்கூடிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. அனைத்துத் துறைகளும் முறையான திட்டமிடுதலோடு ஒருங்கிணைந்து செயல்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்திட வேண்டும்.
பொதுமக்கள் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையினைப் பின்பற்றி, அவசியமின்றி வெளியில் வருவதைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்"
என்று தெரிவித்துள்ளார்.