மாநிலங்களவை எம்.பி தேர்தல் வேட்பாளர்களில் 36% பேர் மீது கிரிமினல் வழக்குகள் - வெளியான திடுக்கிடும் தகவல்!
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் வேட்பாளர்களில் சுமார் 36% பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக ஏடிஆர் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் மொத்தம் 59 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மாநிலங்களவை தேர்தலில் போட்டியின்றி வென்ற 41 வேட்பாளர்களில் அடங்குவர். மீதமுள்ள இடங்களுக்கு தேர்தல் நடைபெறும். தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 27-ம் தேதியன்று அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், அரசியல் சார்பற்ற மற்றும் கட்சி சார்பற்ற அமைப்பான 'ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு’ (Associate for Democratic Reforms) சமீபத்தில் மாநிலங்களவைக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளவர்களின் வழக்குகள், சொத்து விவரங்கள் குறித்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை தயாரிப்பதற்கான கோட்பாடுகள், வேட்பாளர்கள் தாங்கள் அளித்த சுய உறுதிமொழிகளை அடிப்படையாகக் கொண்டவை என தெரிவிக்கப்பட்டது.
அறிக்கையில் தரவுகள்படி, 36% மாநிலங்களவை உறுப்பினர்கள் மீது குற்ற (கிரிமினல்) வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 17% பேர் கடுமையான குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்கின்றனர். மேலும் ஒரு வேட்பாளருக்கு எதிராக கொலை முயற்சி வழக்கு உள்ளது.
ஏடிஆர் வெளியிட்ட அறிக்கையில், 30 பாஜக வேட்பாளர்களில் 8 பேர், 9 காங்கிரஸ் வேட்பாளர்களில் 6 பேர், 4 திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர்களில் ஒருவர், 3 சமாஜ்வாதி வேட்பாளர்களில் 2 பேர், 3 ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர்களில் ஒருவர், 2 ஆர்ஜேடி வேட்பாளர்களில் ஒருவர், 2 பிஜு ஜனதா தளம் வேட்பாளர்களில் ஒருவர் மற்றும் ஒரு பிஆர்எஸ் வேட்பாளர் என சுமார் 54 வேட்பாளர்களில் தங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவை வேட்பாளர்களில் சுமார் 21% பேர் ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துகளைக் கொண்டுள்ளனர். மாநிலங்களவை வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.127.81 கோடியாக உள்ளது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் அபிஷேக் மனு சிங்வி (ரூ.1,872 கோடி), சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ஜெயா பச்சன் (ரூ.1,578 கோடி), மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் குபேந்திர ரெட்டி (ரூ.871 கோடி) ஆகியோர் முதல் 3 இடத்தை பிடித்துள்ளனர் என தரவுகள் கூறுகின்றன.
ஏழை வேட்பாளர்களை பொருத்தவரை, மத்திய பிரதேச பாஜக வேட்பாளர் பால்யோகி உமேஷ் நாத் ரூ.47 லட்சத்துக்கும் அதிகமான சொத்துகளையும், மேற்கு வங்க பாஜக வேட்பாளர் சமிக் பட்டாச்சார்யா ரூ.1 கோடிக்கு அதிகமான சொத்துகளையும், உத்தரப்பிரதேச பாஜக வேட்பாளர் சங்கீதா ரூ.1 கோடிக்கு அதிகமான சொத்துகளையும் கொண்டுள்ளனர்.