சர்ச்சை பேச்சு #MahaVishnu வீடு, அலுவலகங்களில் போலீசார் சோதனை!
மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவை, திருப்பூர் அழைத்துச் சென்ற போலீசார் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.
சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் மூட நம்பிக்கையை வளர்க்கும் வகையில் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். அப்பள்ளியின் பார்வை மாற்றத்திறனாளி தமிழ் ஆசிரியர் சங்கர் என்பவருக்கும், மகாவிஷ்ணுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனைத் தொடர்ந்து சைதாப்பேட்டை காவல்துறை வழக்கு பதிவு செய்தது. பின்னர் சிட்னியில் இருந்து விசாரணைக்கு வருவதாக மஹா விஷ்ணு வீடியோ வெளியிட்டிருந்தார். தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை விமான நிலையத்திலேயே சைதாப்பேட்டை உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
மகாவிஷ்ணு மீது மொத்தம் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கடந்த 7ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, மகாவிஷ்ணுவை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த சூழலில், மகாவிஷ்ணுவை திருப்பூர் அழைத்துச் சென்ற போலீசார் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். மேலும், மகாவிஷ்ணுவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.