த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சு: ஏ.வி.ராஜுக்கு அதிமுக சார்பில் நோட்டீஸ்!
01:25 PM Feb 21, 2024 IST | Web Editor
Advertisement
கூவத்தூர் விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அதிமுக முன்னாள் செயலாளர் ஏ.வி.ராஜூவுக்கு அதிமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Advertisement
சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, அண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அவர் அளித்த பேட்டியில், நடிகை த்ரிஷாவின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிட்டு அதிமுகவை விமர்சித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த பிரச்னைக்கு திரைப் பிரபலங்கள் பலர் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இதுகுறித்து, கீழ்த்தரமான, கேவலமான மனிதர்கள் மீது தேவையான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனிடையே முன்னாள் அதிமுக செயலாளர் ஏ.வி.ராஜு, தான் த்ரிஷாவை பற்றி பேசவில்லை எனவும், தன்னை தவறாக சித்தரித்து காட்டிக்கொண்டு இருக்கிறார்கள் எனவும், த்ரிஷாவின் மனம் புண்பட்டிருந்தால், மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், கூவத்தூர் விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அதிமுக முன்னாள் செயலாளர் ஏ.வி.ராஜூவுக்கு அதிமுகவின் சேலம் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வலியுறுத்தப்பட்டது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஏ.வி.ராஜுக்கு அதிமுக வழக்கறிஞர் ஐ.எஸ்.இன்பதுரை நோட்டீஸ் வழங்கினார். 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க விட்டால் கிரிமனல் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.