அமித்ஷா குறித்து சர்ச்சை பேச்சு: ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு!
மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஏப்ரல் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு மே 18-ம் தேதி, பெங்களூருவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமித் ஷாவுக்கு எதிராக ராகுல் காந்தி பேசிய பேச்சுக்காக அதே ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி அவர் மீது அவதூறு வழக்கு பதியப்பட்டது. பாஜக தலைவர் விஜய் மிஷ்ரா இந்த வழக்கை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் கடந்த பிப். 20-ம் தேதி உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு நடைபெற்றது. விசாரணைக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று ராகுல் காந்திக்கு சம்மனும் அனுப்பப்பட்டிருந்தது. பாரத் ஜடோ நியாய யாத்திரையில் இருந்த ராகுல் காந்தி, நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் கோரினார். இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது.
வழக்கின் மீதான விசாரணை சுல்தான்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய நாளை (ஏப்ரல் 4) கடைசி என்பதால் ராகுல் காந்தியின் விசாரணை மற்றொரு நாள் தள்ளிவைக்கக் கோரி, காங்கிரஸ் தலைவரின் வழக்கறிஞர் காஷி பிரசாத் சுக்லா நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்தார். இதையடுத்து, ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு மீதான விசாரணை ஏப்ரல் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.