ஒவ்வொரு வருடமும் தொடரும் குழப்பம் | நீட் தேர்வு மைய குழப்பத்தால் தேர்வு எழுத முடியாமல் தவித்த மாணவர்!
நீட் தேர்வு மையத்தின் பெயர் ஒரே மாதிரியாக இருந்ததால் வேறொரு மையத்திற்கு சென்று தேர்வு எழுத முடியாமல் மாணவர் ஒருவர் வாய்ப்பை இழந்துள்ளார்.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. தேர்வு எழுதும் மாணவர்கள் மதியம் 1.30 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்து. அதன்படி, மதுரை மாவட்டத்தில் உள்ள 13 தேர்வு மையங்களில், காலை 11 மணி முதல் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், மதுரை நாரயணபுரம் பகுதியில் உள்ள SEV மெட்ரிக் பள்ளி தேர்வு மையத்தில், தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த பரத் கௌசிக் என்ற மாணவர் தேர்வு மையத்திற்கு 1.37 மணியளவில் சென்றுள்ளார். அந்த மாணவர் குறிப்பிட்ட நேரத்தை விட தாமதமாக சென்றதால், தேர்வெழுத அதிகாரிகள் அனுமதி மறுத்தனர்.
இதனையடுத்து அங்கிருந்த பாதுகாப்பு அலுவலர்களிடம் மாணவன் பேசிய நிலையில், தேர்வுக்கான நடைமுறைகள் தொடங்கியதாக கூறி மாணவன் திருப்பி அனுப்பப்பட்டார். தேர்வெழுத வந்த மாணவர் தேர்வு எழுத முடியாமல் போன சம்பவம் அங்கிருந்தவர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது. மனவேதனையுடன் காத்திருந்த மாணவனுக்கு அந்தப் பகுதியில் இருந்த மற்ற மாணவர்களின் பெற்றோர்கள் ஆறுதல் கூறினர்.
இது குறித்து பேசிய அந்த மாணவர், தனது ஹால் டிக்கெட்டில் நத்தம் சாலை பகுதியில் உள்ள தேர்வு மையம் என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், தான் நத்தத்திற்கு சென்று
விட்டதாகவும், தற்போது திரும்பி வருவதற்கு தாமதமான நிலையில் தேர்வு எழுத
முடியாத சூழல் ஏற்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.