2023-ல் திறக்கப்பட்ட ராஜ்கோட் விமான நிலைய மேற்கூரை கிழிந்து விழுந்தது! அடுத்தடுத்து 3 விமான நிலையங்களில் விபத்து!
குஜராத், ராஜ்கோட் விமான நிலையத்தில் விமானப் பயணிகள் இறங்கும் மற்றும் வெளியேறும் இடத்தில் இருந்த மேற்கூரை கனமழை காரணமாக கிழிந்து விழுந்துள்ளது.
டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தபோது, 2009ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டமைப்புதான் இடிந்துவிழுந்ததாக மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு நேற்று விளக்கம் அளித்திருந்தார். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், 2023ஆம் ஆண்டு திறக்கப்பட்ட ராஜ்கோட் விமான நிலையத்திலும் மேற்கூரை கிழிந்து தொங்கியிருப்பதாக எதிர்க்கட்சிகள் சமூக வலைத்தளங்களில் விமரிசித்து வருகிறார்கள். வெளிப்பகுதியில் மிகப்பெரிய கட்டமைப்புகள் எதுவும் இல்லாமல், பெரிய பெரிய கம்பிகளுடன் ஒரு தண்ணீர் உள்புகாத தடித்த பிளாஸ்டிக் உரை மட்டுமே கூரையாக மாற்றப்பட்டுள்ளது. இது கனமழை, பலத்த காற்றின்போது, கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கிறது.
டெல்லியில் கனமழை காரணமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முதல் முனைய மேற்கூரை நேற்று அதிகாலை சரிந்து விழுந்து ஒருவர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து இன்று ராஜ்கோட் விமான நிலைய மேற்கூரை விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது. நல்வாய்ப்பாக, ராஜ்கோட் விமான நிலையத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜ்கோட் விமான நிலையத்தின் வெளிப்பகுதியில் பயணிகள் வாகனங்களில் வந்து இறங்கும் மற்றும் விமான நிலையத்திலிருந்து வெளியேறும் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.
ராஜ்கோட் விமான நிலையம், ரூ.2,654 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் அதாவது 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்று சுமார் ஆறு ஆண்டுகள், விமான நிலைய கட்டுமானப் பணிகள் நடந்து முடிந்துள்ளன. பிறகு, 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், குஜராத் மாநிலத்திலோ, கடந்த 20 ஆண்டுகளாக பாஜக தலைமையிலான ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்தான், தில்லி விமான நிலையத்துக்கு 2009ஆம் ஆண்டு கட்டுமானம்தான் காரணம் என கூறப்பட்ட நிலையில், ராஜ்கோட் விமான நிலைய விபத்துக்கு, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு எந்த விதமான விளக்கத்தைக் கொடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதாக எதிர்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : மாலத்தீவு அதிபருக்கு எதிராக பில்லி சூனியம் வைத்ததாக இரண்டு அமைச்சர்கள் உள்பட 4 பேர் கைது!
இது மட்டுமல்லாமல், வியாழக்கிழமை (27.06.2024), ஜபல்பூர் விமான நிலையத்தின் மேற்கூரை விழுந்து விபத்து நேரிட்ட நிலையில், வெள்ளியன்று (28.06.2024) டெல்லி விமான நிலையத்தில் மிக மோசமான விபத்து நேரிட்டது. இதில் 45 வயதான கார் ஓட்டுநர் பலியானார். அவரது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும், காயமடைந்தவர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும் எனவும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு அறிவித்திருந்தார்.
சுமார் 2534 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட ராஜ்கோட் விமான நிலையம் ரூ.1405 கோடி பொருள் செலவில் ஆறு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மூன்று நாள்களில் மூன்று விமான நிலையங்களின் மேற்கூரைகள் சரிந்திருப்பது குறித்து மத்திய அரசு கவனத்தில் எடுத்து, பெரிய அசம்பாவிதங்கள் நேரிடாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விமானப் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.