"காங். ஆட்சியில் டீ விற்பவர் கூட தேர்தலில் போட்டியிட முடிந்தது" - நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் பதிலடி!
காங்கிரஸ் ஆட்சியில் டீ விற்பவர் கூட தேர்தலில் போட்டியிட முடிந்தது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இத்தேர்தலில் மாநிலங்களவை எம்.பி.க்களாக இருக்கும் மத்திய அமைச்சர்கள் சிலரை வேட்பாளர்களாக பாஜக களம் இறக்கி உள்ளது.
இதையும் படியுங்கள் : IPL 2024 : பெங்களூர் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இன்று மோதல்!
அந்த வகையில், மக்களவை தேர்தலில் மத்திய நிதியமைச்சர் நீர்மலா சீதாராமன் புதுச்சேரி தொகுதியில் போட்டியிடுவார் என்று தகவல் வெளியானது. ஆனால் மத்திய நிதியமைச்சர் நீர்மலா சீதாராமன் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட எந்ந தொகுதியிலும் போட்டியிடவில்லை. இதையடுத்து, தான் ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதற்கான காரணத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது :
“மக்களவைத் தேர்தலில் ஆந்திரா அல்லது தமிழ்நாட்டில் போட்டியிட பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா எனக்கு வாய்ப்பளித்தார். 10 நாட்கள் யோசித்த பிறகு என்னால் தேர்தலில் போட்டியிட இயலாது என்ற பதிலைத் தெரிவித்தேன். மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அளவு என்னிடம் பணமில்லை. எனது வாதத்தை ஏற்றமைக்காக கட்சித் தலைமைக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்றார்.
இதற்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கூறுகையில், "காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது டீ வியாபாரிகள் கூட தேர்தலில் போட்டியிட முடிந்தது. ஆனால், பாஜக ஆட்சியில் நிதியமைச்சர் கூட போட்டியிட முடியவில்லை' என்று தெரிவித்து உள்ளார்.
மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிராஞ்சன் சவுதிரி கூறுகையில்,
"நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சூழ்நிலையால் பாதிக்கப்பட்டவர். அவரை நேர்மையற்ற நபர் என்று நாங்கள் ஒரு போதும் சொல்லவில்லை. அவர் ஒரு திருடன் என்றோ அல்லது அவர் ஒரு செல்வந்தர் என்றோ நான் சொல்லவில்லை. தென்னிந்தியாவில் தேர்தலில் போட்டியிட நிறைய பணம் தேவைப்படலாம். அதனால் தான் அவர் போட்டியிடவில்லை என்று நினைக்கிறேன்" என்றார்.