தமிழ்நாடு காவல்துறை பொறுப்பு டிஜிபி நியமனம் - உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல்!
தமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக பணியாற்றிய சங்கர் ஜிவால் நேற்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) ஓய்வு பெற்றார். இதையொட்டி அவருக்கு நேற்று முன்தினம் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் வழியனுப்பு விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து தமிழக காவல்துறையின் நிர்வாக டி.ஜி.பி. வெங்கடராமன் தமிழகத்தின் புதிய சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து காவல்துறை தலைமையகத்தில் சங்கர் ஜிவால், பொறுப்பு டி.ஜி.பி.யாக பதவியேற்ற ஜி. வெங்கட்ராமனிடம் நேற்று முறைப்படி பொறுப்புகளை ஒப்படைத்தார்.
இந்த நிலையில் சமூக செயற்பாட்டாளரும் , மனித உரிமை ஆர்வலருமான ஹென்ரி திபேன் என்பவர், ஜி. வெங்கட்ராமனை பொறுப்பு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,
”டிஜிபி பதவிக்கான காலம் நிறைவடைவதற்கு மூன்று மாதத்திற்கு முன்பாகவே புதிய நியமனத் தொடர்பாக காவல்துறை டி.ஜி.பி.க்கு தகுதியான நபர்களின் பெயரை யு.பி.எஸ்.சி.க்கு பரிந்துரைக்க வேண்டும். ஆனால் அதனை தமிழ்நாடு அரசு செய்யவில்லை. அதே வேளையில் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.யாக வெங்கட்ராமன் (ஐ.பி.எஸ்.) நியமித்து தமிழ்நாடு அரசானது ஆணை பிறப்பித்துள்ளது. இது உச்ச நீதிமன்றத்தின் உடைய தீர்ப்புக்கு எதிரானது. எனவே உச்சநீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். மேலும் உச்ச நீதிமன்றத்தின் உடைய உத்தரவை மீறி செயல்பட்ட தமிழ்நாடு அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்”
என்று கூறியுள்ளார்.