தொகுதி மறுசீரமைப்பு | தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியுடன் திமுக குழு சந்திப்பு!
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக கடந்த வாரம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தென்மாநிலங்களின் எம்.பி.க்களை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கை குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடைய, சென்னையில் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தென்மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்களை தமிழ்நாட்டு அமைச்சர்கள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகின்றனர். அந்த வகையில், அமைச்சர் கே.என். நேரு, திமுக எம்பிக்கள் கனிமொழி, ஆ. ராசா உள்ளிட்டோர் டெல்லியில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்த கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரேவந்த் ரெட்டி, "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுப்புக்கு வாழ்த்துக்கள். இந்த தொகுதி மறுவரை நமது மாநிலத்தின் அடிப்படை உரிமையை பாதிக்கிறது. காங்கிரஸ் மேலிடத்தின் அனுமதி பெற்று கூட்டத்தில் பங்கேற்பேன். தெலங்கானாவை சேர்ந்த மத்திய அமைசர் கிஷன் ரெட்டி இந்த தொகுதி மறு சீரமைப்பு குறித்து குரல் கொடுக்க வேண்டும். இந்த நடவடிக்கை தெலங்கானவுக்கும் எதிரானது, எனவே கிஷன் ரெட்டி இது குறித்து மத்திய அரசிடம் பேச வேண்டும்" என்றார்.
முன்னதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக், ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரை நேரில் சந்தித்து தமிழ்நாட்டு அமைச்சர்கள் அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.