அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பை கொல்ல சதி... பாகிஸ்தானியர் கைது!
அமெரிக்க முன்னாள் அதிபரும் தற்போதைய அதிபர் தேர்தல் வேட்பாளருமான டொனால்ட் டிரம்பைக் கொலை செய்வதற்காக நீண்டகாலமாகத் திட்டம் தீட்டிவந்ததாக பாகிஸ்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் அதிபராக உள்ள ஜோ பைடனின் பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவுக்கு வர உள்ளது. இதனால் வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடவில்லை. தற்போது துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ் இந்த தேர்தலில் அதிபர் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். இவரை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
தற்போது டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, டிரம்ப் நடத்திய பேரணியின்போது, தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞர், டிரம்ப்பை துப்பாக்கியால் சுட்டார். இந்த தாக்குதலில், டிரம்ப்பின் வலது காதில் காயம் ஏற்பட்டது. மேலும், பார்வையாளர்களில் ஒருவரும் உயிரிழந்தார். இந்தத் தாக்குதலின்போது டிரம்ப்பின் சிறப்புப் பாதுகாவலா் எதிர் தாக்குதல் நடத்தியதில் தாமஸ் உயிரிழந்தார்.
இந்த சூழலில் அமெரிக்காவில் அரசியல் படுகொலைகளை செய்ய திட்டமிட்டதாக பாகிஸ்தானை சேர்ந்த ஆசிஃப் மெர்ச்சன்ட் (வயது 46) என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரை ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் என்ற அமெரிக்காவின் உள்நாட்டு உளவுத்துறையினர் கைது செய்தனர். கைதான ஆசிஃப் மெர்ச்சன்ட்டிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், ஆசிஃப் மெர்ச்சன்ட், டிரம்பை கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்தது.
இதற்காக ஆசிஃப் மெர்ச்சன்ட் கடந்த ஜூன் மாதமே பாகிஸ்தானில் இருந்து புறப்பட்டு அமெரிக்கா சென்றிருந்தார். அவர் 2 கொலையாளிகளுக்கு முன்பணமாக 5 ஆயிரம் அமெரிக்க டாலர்களை கொடுத்திருந்தார். ஆனால், ஆசிஃப் கடந்த மாதம் அமெரிக்காவில் இருந்து புறப்பட முயன்றபோது சிக்கினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்திய தாமஸுக்கும் ஆசிஃபுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று எப்.பி.ஐ. தெரிவித்தது.