ராமர் கோயில் பிரதிஷ்டை – அரைநாள் விடுமுறையை திரும்ப பெற்ற டெல்லி எய்ம்ஸ் நிர்வாகம்!
ராமர் கோயில் பிரதிஷ்டையை முன்னிட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டதையடுத்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அரைநாள் விடுப்பு திரும்ப பெறப்படுவதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில், கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் பூமி பூஜை செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை நாளை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அந்த நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.
தொடர்ந்து நாளை மதியம் 12.20 மணியளவில் தொடங்கும் பிரதிஷ்டை நிகழ்வு, 1 மணி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராமர் கோயில் பிரதிஷ்டையை முன்னிட்டு பல மாநிலங்களில் விடுமுறை அளித்துள்ளதாக அறிவிப்புகள் வெளியாகின. அந்த வகையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையும் விடுமுறை அறிவித்திருந்தது. அதன்படி ஜனவரி 22-ம் தேதி பிற்பகல் 2:30 மணி வரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.
AIIMS, New Delhi clarifies that all clinical services will remain open on 22nd January 2024 to provide seamless and uninterrupted #PatientCare#सर्वेभवन्तुसुखिनः @MoHFW_INDIA @mansukhmandviya #AyushmaanBhav pic.twitter.com/hrg5QltpsY
— AIIMS, New Delhi (@aiims_newdelhi) January 21, 2024
இந்நிலையில், ஜன.22-ம் தேதி அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விடப்பட்ட அரை நாள் விடுப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. நோயாளிகளின் அசௌகரியத்தை தடுக்கும் வகையிலும், நோயாளிகளின் பராமரிப்பு சேவைகளை எளிதாக்கும் வகையிலும், வெளிநோயாளிகள் பிரிவு உட்பட அனைத்து மருத்துவ பிரிவுகளும் செயல்படும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.