ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மலர்கொடி: அதிமுகவில் இருந்து நீக்கி இபிஎஸ் நடவடிக்கை!
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக சென்னை திருவல்லிக்கேணி பகுதி இணைச் செயலாளர் மலர்கொடியை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில், இம்மாதம், 5ம் தேதி ரவுடி கும்பலால் கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் முதற்கட்டமாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில், சென்னை குன்றத்துாரைச் சேர்ந்த ரவுடி, திருவேங்கடம், (33) கடந்த ஞாயிறு அன்று தப்பி ஓட முயன்ற போது போலீசாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.
அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மேலும் 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். அதிமுகவை சேர்ந்த திருவல்லிக்கேணி பகுதி இணைச் செயலாளர் வழக்கறிஞர் மலர்கொடி (49), பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தமாகா வழக்கறிஞர் அணி நிர்வாகி ஹரிஹரன் (27) மற்று திருநின்றவூரைச் சேர்ந்த சதீஷ்குமார் (28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படியுங்கள் : வங்கதேசத்தில் வெடித்த வன்முறை - மாணவர்கள் மீது தாக்குதல் பல்கலைக்கழகங்கள் மூடல்!
இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி மலர்கொடியை கட்சியில் இருந்து அக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"அதிமுக கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், அதிமுக கட்சிக்கு மாசு ஏற்படும் வகையில், செயல்பட்ட காரணத்தினாலும் தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த, மலர்கொடி சேகர், (திருவல்லிக்கேணி மேற்கு பகுதிக் கழக இணைச் செயலாளர்) இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சியின் உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.