“அம்பேத்கர் மீது காங்கிரஸ் வெறுப்பு கொண்டிருந்தது...” - பிரதமர் மோடி விமர்சனம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நடப்பாண்டின் முதல் கூட்டதொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு முதல்நாள் கூட்டத்தில் உரையாற்றினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றினார். அப்போது அவர் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி மற்றும் வேலைவாய்ப்பின்மை குறித்து பேசியிருந்தார்.
இந்த நிலையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,
“இங்கே நாம் அனைவருக்குமான வளர்ச்சியைப் பற்றிப் பேசுகிறோம். வளர்ச்சி மீதான நம்பிக்கையால்தான் மக்கள் எங்களை 3வது முறையாகத் தேர்வு செய்துள்ளனர். காங்கிரஸிடமிருந்து அனைவருக்குமான வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் முழு கட்சியும் ஒரு குடும்பத்திற்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக, அனைத்து கட்சிகளை சேர்ந்த ஓபிசி எம்பி-க்கள் ஓபிசி குழுவிற்கு அரசியலமைப்பு அந்தஸ்து கோரினர். அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அது காங்கிரஸ் அரசியலுக்கு பொருந்தாமல் இருக்கலாம். ஆனால் நாங்கள் அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கினோம். அண்ணல் அம்பேத்கர் மீது காங்கிரஸ் எவ்வளவு கோபத்தையும் வெறுப்பையும் கொண்டிருந்தது என்று ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
அம்பேத்கரை பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர் என்று ஒருபோதும் அவர்கள் கருதவில்லை. தேர்தல்களில் அம்பேத்கரை தோற்கடிக்க காங்கிரஸ் இரண்டு முறை முயன்றது. ஆனால் இப்போது அக்கட்சி கட்டாயத்தின் காரணமாக 'ஜெய் பீம்' என்ற முழக்கத்தை எழுப்ப வேண்டியுள்ளது”
இவ்வாறு என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.