நீட் குறித்து பேசும்போது ராகுல் காந்தியின் மைக் அணைப்பு - காங்கிரஸ் கண்டனம்!
மக்களவையில், நீட் விவகாரம் குறித்து ராகுல் காந்தி பேசிக்கொண்டிருக்கும் போது, மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை மக்களவை கூடியதும் மறைந்த முன்னாள் எம்பிக்கள் கணேசமூர்த்தி உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கும் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். ஆனால் இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டாக இந்த நாட்டின் மாணவர்களுக்கு ஒரு செய்தியை சொல்ல வேண்டும். இதனை முக்கியமான பிரச்னையாக நாங்கள் கருதுகிறோம். மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீட் தேர்வு மோசடிகள் குறித்து இன்று சபையில் தனியே விவாதம் நடத்த வேண்டும்” என்றார்.
பின்னர் பகல் 12 மணிக்கு மக்களவை கூடிய போதும் நீட் தேர்வு மோசடிகள் குறித்து விவாதிக்க சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி மறுத்தார். ராகுல் காந்தி பேசும் போது மைக் துண்டிக்கப்பட்டதை கண்டித்து இந்தியா கூட்டணி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். இதனையடுத்து மக்களவை சபை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கு மக்களவையில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பதலளித்து பேசுகையில், உறுப்பினர்களின் மைக்கை நான் அணைப்பதில்லை எனவும், அத்தைகைய உரிமை எனக்கு இல்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தினார். மேலும், "நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை தொடர்பான விவாதமே நடைபெற வேண்டும். பிற விஷயங்கள் குறித்து பேச அனுமதி கிடையாது,' என்று பிர்லா கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டு, “ஒரு பக்கம், பிரதமர் மோடி நீட் விவகாரம் குறித்து ஏதுவும் பேசாமல் இருக்கிறார். அதே நேரத்தில் இளைஞர்களின் குரலாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசும் போது அவரது மைக் அணைக்கப்படுகிறது. முக்கியமான விவகாரத்தில், மைக் அணைப்பது போன்ற மலிவான செயல்களால் இளைஞர்களின் குரலை ஒடுக்க சதி செய்யப்படுகிறது” என்று பதிவிட்டிருந்தது.