"மத்திய அரசும், மகாராஷ்டிராவின் மகாயுதி அரசும் அதானிக்காக மட்டுமே வேலை செய்து வருகின்றனர்" - ராகுல் காந்தி!
மத்திய அரசும், மகாராஷ்டிராவின் மகாயுதி அரசும் அதானிக்காக மட்டுமே வேலை செய்து வருகின்றனர் என மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் 20-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் சிவசேனா (ஏக்நாத் அணி) பாஜக, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) அடங்கிய மகாயுதி கூட்டணிக்கும் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் அணி), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைய உள்ளது. இதனால், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய அரசையும், மகாராஷ்டிரத்தை ஆளும் மகாயுதி அரசையும் விமர்சித்து மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள் : ஒலியை விட 5 மடங்கு வேகம் கொண்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி!
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் :
"யார் பாதுகாப்பாக உள்ளனர்? அதானி.
யாருக்கு தாராவியின் ரூ. ஒரு லட்சம் கோடி மதிப்பிலான நிலம் வழங்கப்பட்டது? அதானி.
யார் பாதுகாப்பில்லாமல் உள்ளனர்? மகாராஷ்டிரத்தின் சாதாரண மக்கள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள்.
சாதாரண மக்களும் விவசாயிகள் பணமதிப்பிழப்பு, வேலையில்லா திண்டாட்டம், கடன் உள்ளிட்ட பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். ஆனால், நரேந்திர மோடி அரசும், மகாராஷ்டிரத்தின் மகாயுதி அரசும் அதானிக்காக மட்டுமே வேலை செய்து வருகின்றனர்"
இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.