தெலங்கானாவில் காங்கிரஸ், பாஜக மற்றும் பிஆர்எஸ் தலைவர்கள் சூறாவளி பிரசாரம்!
தெலங்கானாவில், காங்கிரஸ், பாஜக மற்றும் அம்மாநிலத்தில் ஆளும் கட்சியான பாரத ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தெலங்கானாவின் 119 பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் வரும் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் முடிவடைய இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் முழுவேகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மோடி, அமித் ஷா, அனுராக் தாக்கூர், ஜேபி நட்டா, ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கடந்த இரண்டு நாள்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதே போன்று காங்கிரஸ் உயர்மட்டத் தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை அமைச்சர் சிவக்குமார், அமைச்சர்கள் என பல தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநிலத்தில் ஆளும் மாநில முதல்வர் மற்றும் அந்தந்த கட்சியின் மாநிலத் தலைவர்கள் தவிர தேசிய தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவதால் மாநிலத் தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது.
தெலங்கானாவில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்கள் பொதுக் கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றுவது, சாலைக் காட்சி பிரசாரங்கள், தெருமுனைக் கூட்டங்கள், மக்களுடன் நேரிடையாக உரையாடுவது, குறிப்பாக இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமான பிரசாரத்தில் ஈடுபடுவது, உணவகங்களில் வாடிக்கையாளர்களை சந்தித்து உரையாடுவது போன்ற பிரசாரத்தில் ஈடுபட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிர்மல் நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், முதல்வர் சந்திரசேகர ராவ் ஏழைகளின் எதிரி, அவர் மக்களுக்கு துரோகத்தைத் தவிர, எதுவும் செய்யவில்லை. மக்களை சந்திக்காத முதல்வர் தெலங்கானாவுக்கு தேவையா? என கேள்வி எழுப்பினார். மஹபூபாபாத் மற்றும் கரீம்நகர் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார், மேலும் இன்று மாலை ஹைதராபாத்தில் சாலைக் காட்சி பிரசாரங்களில் பங்கேற்கிறார்.
மக்தல் நகரில் பாஜக வேட்பாளா்களை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொண்ட மத்திய அமைச்சா் அமித் ஷா, தெலங்கானாவில் பாஜக ஆட்சி அமைந்தால், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த தலைவரை முதல்வராகத் தோ்ந்தெடுப்போம். பட்டியலினத்தைச் சோ்ந்த ‘மடிகா’ சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும். அயோத்தி ராமர் கோயிலில் தெலங்கானா மாநிலப் பக்தர்களுக்கு இலவச தரிசனம் ஏற்பாடு செய்யப்படும்’ என்றாா்.
இதேபோன்று முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் போட்டியிடும் கம்மாரெட்டி தொகுதியில் அவருக்கு எதிராக களமிறக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ரேவந்த் ரெட்டியை ஆதரித்து நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, ‘நாட்டிலேயே ஊழல் மிக்க ஆட்சியை சந்திரசேகா் ராவ் நடத்தி வருகிறாா். பணம் கொழிக்கும் அனைத்துத் துறைகளும் அவரது குடும்பத்தினா் வசமே உள்ளன. ‘தெலங்கானாவுக்கு காங்கிரஸ் என்ன செய்தது என்பதை விட, ‘கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கும் பாரத ராஷ்டிர சமிதி என்ன செய்தது?’ என்பதே கேள்வியாக இருக்க வேண்டும். அவா் செல்லும் சாலைகளும், அவா் படித்த பள்ளி, கல்லூரிகளும் காங்கிரஸ் ஆட்சிகளில் அமைக்கப்பட்டவை. மேலும், காங்கிரஸால் தகவல் தொழில்நுட்ப மையமாக மேம்படுத்தப்பட்ட ஹைதராபாத் நகரில் இருந்து கொண்டுதான் பல கோடிகளை அவா் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறாா் என்றாா் ராகுல் காந்தி.
பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவா் கே.சந்திரசேகா் ராவ் இதுவரை கிட்டத்தட்ட 100 பொதுக்கூட்டங்களில் உரையாற்றியுள்ளார். அதே நேரத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் தாரக ராமாராவ் மற்றும் ஹரிஷ் ராவ் மாநிலம் முழுவதும் சாலைக் காட்சி பிரசாரங்கள், தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.