மறைந்த தலைவர்களுக்கு இரங்கல்: சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு!
சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ஆம் நாளான இன்று மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அவை இன்றைக்கு நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தாண்டு முதல் சட்டமன்ற கூட்டம் நேற்று (ஜன. 6) தொடங்கியது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி அரசு தயாரித்து அளித்த உரையை வாசிக்காமல் புறக்கணித்து அவையில் இருந்து வெளியேறினார். “ஆளுநர் உரைக்கு முன்பாக தேசிய கீதம் பாடப்படாதது அல்லது இசைக்கப்படாதது இந்திய அரசியல் சாசனத்துக்கும் தேசிய கீதத்துக்கும் இழைக்கப்பட்ட அப்பட்டமான அவமரியாதை. இதைத் தொடர்ந்து மிகுந்த வேதனையுடன் பேரவையைவிட்டு ஆளுநர் வெளியேறினார்.” என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது. இருப்பினும் தமிழக அரசியல் கட்சிகள் பலவும் ஆளுநர் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று தமிழக சட்டப்பேரவை கூடியது. அவையில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்திய பின்னர் அவை இன்றைக்கு நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.