கோதுமை இருப்பு விவரங்களைக் கட்டாயம் அறிவிக்க வேண்டும் - மத்திய அரசு உத்தரவு!
அனைத்து விற்பனையாளர்களும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தங்களிடம் உள்ள கோதுமையின் இருப்பு நிலையை அறிவிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து வகை நிறுவனங்களுக்கும் மார்ச் 31 ஆம் தேதி வரை கோதுமை இருப்பு வரம்பு விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மொத்த மற்றும் சில்லறை உள்ளிட்ட அனைத்து விற்பனையாளர்களும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், தங்களிடம் உள்ள கோதுமையின் இருப்பு நிலையை அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அவர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோதுமையின் இருப்பு நிலையை இணையத்தில் அறிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பதுக்கலை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோதுமை மற்றும் அரிசி விலையைக் கட்டுப்படுத்தவும், இவை நாட்டில் எளிதாகக் கிடைப்பதை உறுதி செய்யவும் உணவு மற்றும் பொது விநியோகத் துறை கோதுமை மற்றும் அரிசி இருப்பு நிலவரத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
முன்னதாக அரிசி கையிருப்பை அறிவிக்குமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இணையதளத்தில் இதுவரை பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் தங்களைப் பதிவு செய்து, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோதுமை மற்றும் அரிசி கையிருப்பை வெளியிட வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.