சிறையில் இருந்து கொண்டே ஆன்லைனில் உயர்ரக போதைப் பொருள் விற்பனை! - உகாண்டாவைச் சேர்ந்த நபரை கைது செய்ய தமிழ்நாடு போலீஸ் திட்டம்!
கோவை மாநகரில் உயர்ரக போதை பொருள் விற்பனை செய்த வழக்கில் தொடர்புடைய உகாண்டா நபரை கைது செய்ய கோவை மாநகர போலீசார் இன்று பெங்களூரூ செல்கின்றனர்.
கோவை மாநகரில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து மெத்தடமைன் என்னும் உயர்ரக போதை பொருள் செய்யப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு கிடைத்தது. இந்த தகவல்களின் அடிப்படையில் கடந்த மாதம் கோவை மாநகர காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்தனர். அதில் போதை பொருட்கள் விற்பனை செய்த கௌதம்,அபிமன்யு, ஃபாசில், முகமது ஹர்ஷித், இஜாஸ், பெவின் ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டு 102 கிராம் மெத்தடமைன் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்களிடன் நடத்திய விசாரணையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரவீன் குமார் மற்றும் கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த வினோத் ஆகியோர் கர்நாடகா மாநிலம் பெங்களூர் தார்வார் பகுதிகளில் இருந்து போதைப்பொருட்கள் கடத்தி வந்து விநியோகம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கைதான பிறகு பிரவீன் குமார், வினோத் ஆகிய இருவரிடம் நடத்திய விசாரணையில் போதை மருந்து கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது கென்யா நாட்டைச் சேர்ந்த இவி பொனுகே என்ற பெண் என்பது தெரியவந்தது.
இதையும் படியுங்கள் : டிஎன்பிஎல் கிரிக்கெட் – 3 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் அணியை வீழ்த்தி நெல்லை வெற்றி!
இதனைத் தொடர்ந்து இவி பொனுகே கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதில், தார்வார் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் சட்டக் கல்வி படிப்பதற்காக வந்த இவி பொனுகே, சட்டக் கல்வியை முடிக்காமலும், விசா காலாவதியாகிய பிறகும் தங்கியிருந்ததும் தெரிய வந்தது. மேலும் பெங்களூரில் இருந்து கொண்டே ஆன்லைன் மூலம் போதை மருந்து விற்பனை செய்து வந்த இந்த பெண் பெங்களூர் சிறையில் உள்ள உகாண்டாவைச் சேர்ந்த காபோன்கே போன் மூலம் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் போதை மருந்தை அனுப்பி வைத்ததும், நேரடியாக கொடுக்காமல் ஆன்லைன் மூலம் பணத்தைப் பெற்றுக் கொண்டதும் தெரிய வந்தது.
இதனிடையே உகாண்டா நாட்டைச் சேர்ந்த காபோன்கே என்பவர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து கொண்டு போதைப் பொருள் விற்பனையை அரங்கேற்றியது தெரியவந்த நிலையில் கோவை மாநகர காவல் துறையில் உள்ள அமலாக்க பிரிவு போலீசார் காபோன்கே-வை கைது செய்ய கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் கோவை நீதிமன்றம் கைது வாரண்டை பிறப்பித்தது. இதனையடுத்து இன்று கோவை மாநகர போலீசாரின் அமலாக்க பிரிவு போலீசார் பெங்களூரில் பரப்பன அக்ரஹர சிறையில் உள்ள காபோன்கே- வை கைது செய்ய பெங்களூர் விரைகின்றனர்.