#Thailand சென்றதை மறைக்க #Passport பக்கங்களை கிழித்த கல்லூரி மாணவி கைது!
மும்பையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தனது பாஸ்போர்ட்டில் இருந்த 4 பக்கங்களை கிழித்ததற்காக கைது செய்யப்பட்டார்.
மும்பையைச் சேர்ந்தவர் கடோல். 25 வயதான இவர் பேஷன் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வொர்லியில் உள்ள தனது கல்வி நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப்பிற்காக சுற்றுலா விசாவில் சிங்கப்பூர் செல்ல முயன்றிருக்கிறார். அப்போது, சிங்கப்பூர் விமான நிலையத்தில் ஏற முயன்றபோது அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அவரை கைது செய்தனர். கடோலின் பாஸ்போர்ட்டில் நான்கு பக்கங்கள் காணவில்லை என்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
கடோல், கடந்த பிப்ரவரி 11 முதல் 14 வரை உடல்நிலை சரியில்லை எனக்கூறிவிட்டு தேர்வு எழுதாமல் தாய்லாந்துக்கு சென்றிருக்கிறார். இதனை அவரது கல்வி நிறுவனத்திடம் இருந்து மறைப்பதற்காக தனது பாஸ்போர்ட்டில் இருந்து நான்கு பக்கங்களை கிழித்ததாக தெரிவித்திருக்கிறார். சிங்கப்பூரில் இன்டர்ன்ஷிப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்குமாறு அவரது கல்வி நிறுவனம் கேட்டபோது, தான் ஏமாற்றியது தெரிந்துவிடுமோ என அஞ்சி இந்த குற்றத்தை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார். கடோல் மீது பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் மோசடி மற்றும் மீறல் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன.
இதேபோன்ற ஒரு சம்பவத்தில், மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஜூலை மாதத்தில் துஷார் பவார் (33) என்பவரை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் பாங்காக் மற்றும் தாய்லாந்திற்கு சென்றதை தனது மனைவியிடம் இருந்து மறைப்பதற்காக அவர் தனது பாஸ்போர்ட்டில் இருந்து 12 பக்கங்களை கிழித்ததாக தெரிவித்தார்.
பவார் மீது பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) 318 (4) பிரிவுகளின் கீழ் மோசடி மற்றும் இந்திய பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.