"சென்னைப் பெருநகருக்கான தூய காற்றுச் செயல்திட்டம் அறிவியல்பூர்வமாக உருவாக்கப்பட வேண்டும்" - #AnbumaniRamadoss
சென்னைப் பெருநகருக்கான தூய காற்றுச் செயல்திட்டம் அறிவியல்பூர்வமாக உருவாக்கப்பட வேண்டும். அதன் கீழ் நுண் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :
"மனித உயிரிழப்புக்கு முக்கியக் காரணமாகத் திகழும் காற்று மாசுவைத் தடுக்கும் நோக்குடன் ஒவ்வொரு நாளும் செப்டம்பர் 7-ஆம் தேதி நீல வானுக்கான தூயக்காற்று பன்னாட்டு நாளாக (International Day of Clean Air for blue skies) கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இதுகுறித்த புரிதல் எதுவும் இல்லாமல், சென்னையில் காற்று மாசுவைத் தடுக்கும் நோக்குடன் 2021-ஆம் ஆண்டில் மத்திய அரசு நிதியுதவியுடன் அறிவிக்கப்பட்ட சென்னைக்கான தூயக்காற்று செயல்திட்டத்தை செயல்படுத்தாமல் தமிழக அரசு முடக்கி வைத்திருக்கிறது. மக்களின் உயிரோடு விளையாடும் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.
தூய்மையாக இருக்கும் போது மனிதர்கள் உயிர்வாழ்வதற்கு காரணமாக இருக்கும் காற்று தான், மாசு அடையும் போது மனிதர்களின் உயிரிழப்புக்குக் காரணமாகிறது. இதனால் ஆண்டுதோறும் உலகளவில் 70 லட்சம் பேரும், இந்தியாவில் 17 லட்சம் பேரும், சென்னையில் 11,000 பேரும் உயிரிழக்கின்றனர். உலக நலவாழ்வு அமைப்பின் காற்றுத் தர அளவுக்கு ஈடாகச் சென்னை மாநகரின் காற்றைத் தூய்மையாக மாற்றினால், சென்னைவாழ் மக்களின் சராசரி வாழ்நாளில் 4 ஆண்டுகளை அதிகமாக்க முடியும் என்று சிகாகோ பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது. இந்த நோக்கத்தை எட்டும் வகையில் சென்னை மாநகர தூய காற்றுச் செயல்திட்டம் (Action Plan for Control of Air Pollution in Million Plus City of Tamilnadu, Chennai) மத்திய அரசு நிதியுதவியுடன் கடந்த 2021-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டம் 2021-22 முதல் 2025-26 வரையில் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஆனால், இந்தத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கவில்லை. மாறாக மத்திய அரசு இத்திட்டத்திற்காக ஒதுக்கிய ரூ. 367 கோடியை மட்டும் 2023-ஆம் ஆண்டு வரை செலவிட்ட தமிழ்நாடு அரசு, அதன்பிறகு இந்தத் திட்டத்தை முடக்கி வைத்து விட்டது. இச்செயல்திட்டத்தின் பெரும்பாலான கூறுகளை செயல்படுத்துவதற்கான காலக்கெடு ஏற்கனவே முடிவடைந்து விட்ட நிலையில், அவை இன்னும் செயல்படுத்தப்படவில்லை.
எடுத்துக்காட்டாக, சென்னையின் சுற்றுச்சூழலைச் சீர்கெடுத்து மக்களின் உடல்நலனைப் பாதிக்கும் மாசுக்கள் எங்கிருந்து எந்த அளவுக்கு வருகிறது என்பதைக் கணக்கிடுவதற்கான ஆய்வைத் தேசியத் தூய காற்றுத் திட்டத்தின் கீழ் ரூ. 2.23 கோடி செலவில் சென்னை ஐஐடி நிறுவனம் நடத்தியது. இந்த ஆய்வின் முடிவுகள் அடங்கிய அறிக்கை 2022 ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று சென்னைக்கான தூய காற்று செயல்திட்டத்தில் கூறப்பட்டது. பின்னர், ஆய்வு முடியும் நிலையில் உள்ளது. ஓரிரு மாதங்களில் வெளியிடப்படும் என்று கடந்த 2022ம் ஆண்டு செப்.11ம் தேதி சென்னை ஐஐடி தெரிவித்தது. ஆனால், அதன்பின் இரு ஆண்டுகள் முடியும் நிலையில் இன்னமும் அந்த அறிக்கை வெளிவரவில்லை. இந்த அறிக்கை வெளிவந்தால்தான் எந்தப் பகுதியில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற விவரம் துல்லியமாகத் தெரியவரும்.
இந்த திட்டம் முறையாக செயலாக்கப்படுவதை கண்காணிப்பதற்கான காலாண்டு அறிக்கைகள், 2022-ஆம் ஆண்டு முதல் இன்று வரை மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்படவே இல்லை என மத்திய அரசின் கண்காணிப்புக் குழு அறிக்கைகள் கூறுகின்றன. இந்த திட்டம் தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்வதற்கான விவரங்கள் எதுவுமே சென்னை மாநகராட்சி இணையதள பக்கத்தில் 2022 பிப்ரவரி மாதத்திற்கு பிறகு பதிவேற்றப்படவே இல்லை. தூயக் காற்று செயல் திட்டத்தின் நடவடிக்கைகள் பற்றிய தகவல் உரிமைச் சட்ட மனுவுக்கு அளித்த பதிலில் - சென்னை மாநகராட்சியிடம் இந்த திட்டத்தின் செயலாக்கம் குறித்த எந்த விவரமும் இல்லை என பதில் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை காற்று மாசுபாடு குறித்து பொதுமக்கள் புகார் செய்வதற்கான குறைதீர்ப்பு செயல்முறை உருவாக்கப்படும் என சென்னை தூய காற்று செயல்திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல் உரிமைச் சட்டத்தின்படி எழுப்பப்பட்ட வினாவுக்கு ‘‘தனிநபர் சம்மந்தப்பட்ட தகவல்களை வழங்க வேண்டியதில்லை’’ என சென்னை மாநகராட்சி பதில் அளித்துள்ளது. சென்னை மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான தூயக் காற்று செயல் திட்டத்தை தமிழ்நாடு அரசு எப்படியெல்லாம் அலட்சியப்படுத்துகிறது என்பதற்கு இவையெல்லாம் எடுத்துக்காட்டுகள் ஆகும்.
தூயக்காற்று செயல்திட்டத்தில் முதலில் சேர்க்கப்பட்ட 102 நகரங்களில் சென்னை இல்லை. தூத்துக்குடி மட்டுமே இருந்தது. சென்னை மாநகரை இத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என மருத்துவர் அய்யா அவர்களும், நானும் 2019, 2020-ஆம் ஆண்டுகளில் அறிக்கை மற்றும் கடிதம் மூலம் வலியுறுத்தியதைத் தொடர்ந்து தான் 15ஆவது நிதிக்குழுப் பரிந்துரைப்படி 2021ஆம் ஆண்டில் சென்னை சேர்க்கப்பட்டது.
தேசியத் தூய காற்றுத் திட்டம் என்பது அரசியல் அமைப்புச் சட்டத்தின் உயிர்வாழும் உரிமையைப் பாதுகாக்கும் 21ஆம் பிரிவின் கீழும், இந்திய காற்று மாசு தடுப்புச் சட்டத்தின் படியும், உச்சநீதிமன்றம் மற்றும் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின்படியும் உருவாக்கப்பட்டிருப்பதால், தூய காற்று இலக்கு என்பது அரசின் சட்டப்பூர்வமான கடமை ஆகும். இத்திட்டத்தின் கீழ், 2026ஆம் ஆண்டுக்குள் சென்னைப் பெருநகரின் காற்று மாசுபாட்டைக் கணிசமாகக் குறைக்க வேண்டும் என்பது இந்திய அரசும், தமிழ்நாடு அரசும். சென்னை மாநகராட்சியும் கூட்டாக ஏற்றுக்கொண்டுள்ள உறுதி ஆகும்.
இதையும் படியுங்கள் : சிக்கிமில் ராணுவ வாகன விபத்தில் உயிரிழந்த கான்சாபுரம் #Soldier – உடலை விரைந்து கொண்டு வர உறவினர்கள் கோரிக்கை!
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உருவாக்கி 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்ட சென்னைப் பெருநகருக்கான காற்று மாசு தடுப்புச் செயல்திட்டம் அறிவியல் பூர்வமானதாகவோ தூய காற்று இலக்கினை அடைய வழிசெய்வதாகவோ இல்லை. உலக நலவாழ்வு அமைப்பும் ஐநா சுற்றுச்சூழல் திட்டமும் (UNEP) முன்வைக்கும் மெய்ப்பிக்கப்பட்ட தூய காற்றுத் திட்டங்களை இது கொண்டிருக்கவில்லை. மாறாக, அடுக்குமாடி வாகன நிறுத்தம் கட்டுவது, மேம்பாலங்கள் கட்டுவது, சாலைகளை விரிவாக்குவது உள்ளிட்ட காற்று மாசுபாட்டை அதிகமாக்கும் திட்டங்களைத் தான் தூய காற்றுத் திட்டமாக தமிழ்நாடு அரசு முன்வைத்தது. ஆனால், அந்த அரைகுறை திட்டத்தைக் கூட இன்னும் நிறைவேற்றாதது தமிழ்நாடு அரசின் கடமை தவறிய மிக மோசமான செயல் ஆகும்.
காற்று மாசுபாட்டைத் தடுப்பதன் மூலம் சென்னைப் பெருநகரின் ஒரு கோடிக்கும் கூடுதலான மக்களுக்கும், இனிவரும் பல தலைமுறையினருக்கும் நலவாழ்வை உறுதி செய்ய முடியும் என்பது அறிவியல்பூர்வமான உண்மை ஆகும். சென்னைப் பெருநகருக்கான தூய காற்றுச் செயல்திட்டம் (City Clean Air Action Plan) அறிவியல்பூர்வமாக உருவாக்கப்பட வேண்டும். அதன் கீழ் நுண் திட்டங்கள் (Micro Action Plan) உருவாக்கப்பட வேண்டும். அவற்றைச் செயல்படுத்துவதற்கு தேவையான நிதியும் மனித வளமும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். குறித்த காலத்திற்குள் தூயக்காற்று திட்டங்கள் செயலாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்"
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்தார்.