போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!
மயிலாடுதுறை அருகே பாலையூரில் போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் பொய்கை வளர் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் தகராறு செய்துள்ளனர். இதன் தொடர்பான பாலையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். இளைஞர்களுக்கு ஆதரவாக கோனேரிராஜபுரம் ஊராட்சி துணைத் தலைவர் மதியழகன் மற்றும் திமுக பிரமுகர் முருகன் ஆகியோர் பாலையூர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
இதையும் படியுங்கள்: ”டாக்டர் பட்டம் கிடைக்கவில்லை என வருத்தமாக இருந்தேன், இன்று அதுவும் கிடைத்து விட்டது”- பாடகி பி.சுசீலா பேட்டி
அப்போது அந்த இளைஞர்களை போலீசார் அடித்ததாகவும் அதனை தடுத்த திமுக பிரமுகர் முருகனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனை கண்டித்து திமுகவினர் மற்றும் பொதுமக்கள் பாலையூர் காவல் நிலையம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த மயிலாடுதுறை டிஎஸ்பி சஞ்சீவ்குமார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தால் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் காரைக்கால்- கும்பகோணம் இடையே போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.