For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சித்திரை திருவிழா - கோலாகலமாக தொடங்கியது மீனாட்சி – சுந்தரேசுவரர் திருத்தேரோட்டம்!

சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
07:37 AM May 09, 2025 IST | Web Editor
சித்திரை திருவிழா   கோலாகலமாக தொடங்கியது மீனாட்சி – சுந்தரேசுவரர் திருத்தேரோட்டம்
Advertisement

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதிலும் சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா பிரசித்தி பெற்ற திருவிழாவாக நடைபெறும். இந்தாண்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Advertisement

அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனும், சுவாமியும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான 8 ஆம் நாளில் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 9 ஆம் நாள் நிகழ்வாக திக் விஜயமும் நடைபெற்று முடிவடைந்தது.

சித்திரை திருவிழாவின் 10 ஆம் நாள் நிகழ்வான விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று காலை கோலகலமாக நடைபெற்றது. இந்த நிலையில் இன்று சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருத்தேரோட்டத்தை முன்னிட்டு கீழமாசி வீதியில் உள்ள தேரடிக்கு மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரர் பிரியாவிடை உடன் கோயிலிலிருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அழைத்து வரப்பட்டு அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான பெரிய தேரில் சுந்தரேஸ்வர் பிரியாவிடை சமேதராகவும், மீனாட்சியம்மன் சிறிய தேரிலும் சிறப்பு அலங்காரத்திலும் எழுந்தருளினர். அப்போது தேரோட்டம் தொடங்கும் முன் அங்குள்ள கருப்பணசுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டுப் பெரிய தேர் புறப்பட அதைத் தொடர்ந்து சிறிய தேரும் புறப்பட்டது.

தொடர்ந்து சுவாமி - அம்மன் திருத்தேருக்கு முன், அலங்கரிக்கப்பட்ட யானை முன்னே செல்ல அவற்றைத் தொடர்ந்து விநாயகரும் இரண்டாவதாக முருகப்பெருமானும், நாயன்மார்களும் அமர்ந்திருந்த சப்பரங்கள் சென்றன. சுவாமி - அம்மனின் திருத்தேர், கீழமாசி வீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்குமாசி வீதிகளில் வலம் வந்தது.

மாசி வீதிகளில் ஆடி அசைந்து வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரின் முன்பாக ஏராளமான பக்தர்கள் சங்கு முழங்கியும், பல்வேறு வகையான இசைகளை இசைத்தபடியும், ஹர ஹர சங்கரா, சிவ சிவ சங்கரா என்ற பக்தி கோஷங்களை எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தைக் காண மதுரை மக்களும் அண்டை மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். திருத்தேரோட்டத்தை முன்னிட்டு மாசு வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு பாதுகாப்பு பணியில் 2,000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags :
Advertisement