லக்னோ அணியின் ஆலோசகராகிறார் ‘சின்ன தல’ ரெய்னா?
சுரேஷ் ரெய்னா லக்னோ அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் விளையாட்டில் நாடு கடந்து ரசிகர்களை கொண்டது ஐபிஎல் தொடர். ஐபிஎல் போட்டிகளில் அனல் பறப்பதால் ஒவ்வொரு வருடமும் இத்தொடரை கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். ஐபிஎல் போட்டியில் பங்கேற்க ஒவ்வொரு அணிக்கும் வீரர்கள் ஏலம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இதனால் வீரர்கள் அணி மாறுவதும், அதிரடி மாற்றங்கள் நிகழ்வதும் வாடிக்கையானது. இந்த ஐபிஎல் அணியில் 2 ஆண்டுகள் முன்னதாக புதிதாக உருவாக்கப்பட்ட லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணியின் ஆலோசகராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், நாடாளுமன்ற எம்.பியுமான கௌதம் கம்பீர் செயல்பட்டு வந்தார்.
இதையும் படியுங்கள்: முழு கொள்ளளவை எட்டிய மணிமுத்தாறு அணை – 1,000 கன அடி நீர் திறப்பு!
தற்போது அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக மாறியுள்ளார். இந்த நிலையில் லக்னோ அணிக்கு ஆலோசகராக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஐபிஎல் தொடரில் பல ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சுரேஷ் ரெய்னா, தோனியுடன் இணைந்து பல வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார்.
மேலும் தோனியை ‘தல’ என அழைப்பது போல, சிஎஸ்கே ரசிகர்கள் ரெய்னாவை ‘சின்ன தல’ என்று அழைத்து வந்தனர். ஆனால் கொரோனா காலத்தில் துபாயில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது சிஎஸ்கே நிர்வாகம், ரெய்னா இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் அவர் பாதியில் வெளியேறினார்.
இந்நிலையில் லக்னோ அணியின் ஆலோசகராக ரெய்னா நியமிக்கப்பட்டால் அவரது அனுபவமும், செயல்திறனும் லக்னோ அணியின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.