சிறுவன் கடத்தல் வழக்கு - ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய உத்தரவு!
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தை சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்தார். இதில், பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை கடத்தியதாக, புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் பெண்ணின் தந்தை உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெகன்மூர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், இந்த கடத்தல் வழக்கில் ஜெகன்மூர்த்திக்கு எந்த தொடர்பும் இல்லை என வாதிட்டார்.
தொடர்ந்து காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தாமோதரன், வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சரத்குமார் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் ஜெகன்மூர்த்தியின் பங்கு குறித்து குறிப்பிட்டிருப்பதாகவும், கடத்தப்பட்ட சிறுவன், ஏ.டி.ஜி.பி. ஜெயராமனின் காரில் திரும்ப கொண்டு வந்து விடப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.