For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்ட மசோதா குறித்த முதலமைச்சரின் அறிவிப்பு - அண்ணாமலை விமர்சனம்!

09:57 PM Jun 28, 2024 IST | Web Editor
மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்ட மசோதா குறித்த முதலமைச்சரின் அறிவிப்பு   அண்ணாமலை விமர்சனம்
Advertisement

மதுவிலக்கு அமலாக்க திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இன்று அறிவித்தார். இதனை விமர்சித்து பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement

கள்ளக்குறிச்சி மற்றும் புகர்ப் பகுதிகளில் கடந்த 18, 19-ம் தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை அருந்தியதில் கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 229 பேர் பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, உடல்நலம் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 229 பேரும், கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மற்றும் கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.

இவர்களில் இன்றுவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 32 பேர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 7 பேர், சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் 22 பேர், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 பேர் என மொத்தம் 65 பேர் உயிரிழந்ததாக கள்ளக்குறிச்சி மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.

இதனிடையே, சட்டப்பேரவையில் விஷச்சாராய வழக்கு தொடர்பாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய பொருட்களைக் காய்ச்சுதல், விற்பனை செய்வது போன்ற குற்றங்களுக்கான தண்டனை போதுமானதாகவும் கடுமையாகவும் இல்லை. இதுபோன்ற குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்கி, இக்குற்றங்களை முற்றிலும் தடுக்க முதற்கட்டமாக, தமிழ்நாடு மது விலக்குச் சட்டம், 1937-ல் திருத்த மசோதா ஒன்று நாளை (ஜூன் 29) சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும்” என தெரிவித்தார்.

இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “கடந்த 2023-ம் ஆண்டு, 23 பேர் பலியாகக் காரணமாக இருந்த கள்ளச்சாராய வியாபாரி மரூர் ராஜாவுக்கு மிக நெருக்கமான அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த ஆண்டு, கள்ளக்குறிச்சியில் 65 பேர் பலியான பின்பும், மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமியைப் பதவி நீக்கம் செய்யவில்லை.

 

திமுக மூத்த தலைவர்கள் அனைவருக்கும் நெருக்கமான, போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜாஃபர் சாதிக்குக்கு, திமுகவில் உயர் பதவி கொடுத்து, ரூ.2,000 கோடி சம்பாதிக்கும் வரை வேடிக்கை பார்த்தீர்கள். இத்தனையும் செய்து விட்டு, தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937ல், தண்டனைகள் கடுமையாக இல்லை என்று திருத்த மசோதா கொண்டு வருகிறேன் என்று முதலமைச்சர் கூறுவது, இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை” என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement