முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் - எடப்பாடி பழனிசாமி காட்டம்!
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 34-ஆக அதிகரித்துள்ளது. மேலும் விஷச்சாராயம் குடித்ததில் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. விஷச்சாராயம் விவகாரம் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களிடம் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சென்று நலம் விசாரித்தார். விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் உறவினர்களைச் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களை அவர் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
"கள்ளச்சாராயம் விற்பனை நடந்த பகுதிக்கு அருகே நீதிமன்றம், காவல் நிலையம் இருக்கிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இருக்கிறது. இவ்வுளவு அரசு அலுவலகங்கள் இருந்தும், கண்காணிப்பின்மை காரணமாக 35 பேர் இறந்துள்ளனர். இது வேதனையாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நேற்று முதல் தற்போது வரை 200 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மதியம் வரை 3 பேர் பலி என செய்தி வந்த நிலையில், அடுத்தடுத்து கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியை தந்துள்ளது. அரசு அலுவலகங்கள் உள்ள பகுதியில் இவ்வுளவு மோசமாக கள்ளச்சாராய விற்பனை நடந்துள்ளது. இந்த கள்ளச்சாராய விற்பனைக்கு பின்னணியில் ஆளுங்கட்சியை சேர்ந்த அதிகார கும்பல் இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வுளவு துணிச்சலாக கள்ளச்சாராய விற்பனை நடக்க காரணம் என்ன?.
ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் உதவி இருக்கிறார்கள். இதனால் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 22 பேர் கள்ளச்சாராய விவகாரத்தில் உயிரிழந்தார்கள். அப்போதும் நான் கள்ளச்சாராயம் தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்டுவதாக கூறினேன். இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன்.
அப்போதே வழக்கு சிபிசிஐடி விசாரணை நடந்தபோதிலும், இன்று வரை எந்த கைதும் இல்லை, நடவடிக்கை இல்லை. இன்றும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர், 5 நாட்களுக்கு முன்னதாகவே கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு கள்ளச்சாராய விற்பனையை தடுக்க அறிவுறுத்தினார். ஆனால் காவல்துறை அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. ஏழை-எளிய மக்கள் கள்ளச்சாராயம் குடித்து பலியாகி இருக்கின்றனர். இந்த விசயத்திற்கு முழு பொறுப்பேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர் கள்ளச்சாராய மரணத்தை வயிற்றுவலி என கூறி அரசுக்கு முட்டுக்கொடுக்கிறார்.
திமுக அரசு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் காண்பித்த அக்கறையை கள்ளக்குறிச்சிக்கு காண்பித்து இருக்கலாம். மருத்துவமனையில் தேவையான வசதிகளை அரசு ஏற்படுத்தவில்லை. மருந்துகளை கையிருப்பு வைத்திருக்கவில்லை. இதனால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. மருத்துவரை கூட நியமனம் செய்யவில்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் அறிவிக்கப்பட்டு, மருத்துவமனை அமைத்து கொடுக்கப்பட்டது. Omeprazole என்ற மருந்துகள் கூட திமுக அரசு வாங்கி கையிருப்பு வைக்கவில்லை.
விஷ சாராயத்தில் பெற்றோரை இழந்த குடும்பத்துக்கு, அதிமுக சார்பில் மாதம் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை உட்பட பிற உதவிகளும் செய்யப்படும். பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச்செலவை அதிமுக ஏற்கிறது" என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.