”அமெரிக்காவின் வரியால் தவிக்கிறது திருப்பூர் ”- முதல்வர் ஸ்டாலின்!
அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள திருப்பூர் ஆயத்த ஆடைத் துறையை பாதுகாக்க தவறியதாக குற்றம் சாட்டி மத்திய பாஜக அரசை கண்டித்து திருப்பூரில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் .ஜவாஹிருல்லா, மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சு.வெங்கடேசன் , விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் போன்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றி அடைந்துள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
”பிரதமர் மோடி அவர்களே, தாங்கள் ஆதரித்த டிரம்ப் அவர்கள் விதித்துள்ள வரிகள் காரணமாக, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும், இந்தியாவின் பல மாநிலத் தொழிலாளர்களுக்கும் வாழ்வளிக்கும் டாலர் சிட்டியான திருப்பூர் தவிக்கிறது. குஜராத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் இரஷ்ய கச்சா எண்ணெய் கிடைப்பதற்காக, பல ஆயிரம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் எங்கள் ஏற்றுமதியாளர்களை நீங்கள் பரிதவிக்க விடுவது எந்த விதத்தில் நியாயம்? நான் ஏற்கெனவே, கடிதத்தில் கூறிய நிவாரணங்களை உடனடியாக அறிவித்து, ஆவன செய்யுங்கள். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வுகண்டு விஷ்வகுரு எனும் தங்கள் பட்டப் பெயருக்கு நியாயம் செய்யுங்கள்”
என்று தெரிவித்துள்ளார்.