இல.கணேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
நாகாலாந்து மாநில ஆளுநராகப் பதவி வகித்து வந்த இல. கணேசன், தனது இல்லத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாகக் கடந்த 10 நாட்களாகச் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 80.
ஆளுநர் இல. கணேசன், நாகாலாந்தில் உள்ள தனது இல்லத்தின் கழிப்பறையில் கால் இடறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டு, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 10 நாட்களாக அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், நேற்று காலை அவரது நிலைமை கவலைக்கிடமானது. மருத்துவர்களின் தொடர் முயற்சிகள் பலனளிக்காத நிலையில், நேற்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இதனை தொடர்ந்து இல.கணேசன் மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர். தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பா.ஜ.க. உள்பட பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்து வருகின்றனர். இந்த நிலையில் இல.கணேசன் உடலுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார். அவருடன் அமைச்சர்கள் நேரு, மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மூத்த அரசியல் தலைவரும் நாகாலாந்து மாநில ஆளுநருமான திரு. இல. கணேசன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன். திரு. இல. கணேசன் அவர்கள் பா.ஜ.க. மாநிலத் தலைவர், பா.ஜ.க. தேசிய துணைத்தலைவர், மாநிலங்களவை உறுப்பினர், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து மாநிலங்களின் ஆளுநர் எனப் பல்வேறு பொறுப்புகளைத் திறம்பட வகித்த, நீண்ட பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரர். அரசியல் வாழ்க்கைக்காகத் திருமணம் கூட செய்துகொள்ளாமல் பொதுவாழ்வுக்குத் தம்மை அர்ப்பணித்தவர்.
நெருக்கடி நிலைப் பிரகடனத்தை கண்டித்துப் போராட்டம் நடத்தி, பாடல்கள் எழுதியவர். மாற்றுக் கொள்கைகள் கொண்ட இயக்கங்களில் உள்ள தலைவர்களிடத்திலும் மரியாதை பாராட்டி, மாண்புடன் நடந்துகொண்டு, அரசியல் நாகரிகத்தைப் பேணிக்காத்த அரிய தலைவர்களில் ஒருவர். திரு. இல. கணேசன் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தார். தலைவர் கலைஞர் அவர்களும் முதலமைச்சராக இருந்தபோது, திரு. கணேசன் அவர்களின் பிறந்தநாளில் அவரது இல்லத்துக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, தமது அன்பை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எளிமை, அதிர்ந்து பேசாத பண்பு, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தன்மை ஆகியவற்றால் அனைத்துத் தரப்பிலும் நண்பர்களைக் கொண்டவராகத் திரு. இல. கணேசன் அவர்கள் விளங்கினார்.
உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் முழு உடல்நலம் பெற்று, மீண்டு வருவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், அவரது மறைவுச் செய்தி வேதனையளிக்கிறது. அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், அரசியல் கட்சித் தலைவர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.