பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அப்போது ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட அமிர்தம்மாள் காலணி விளையாட்டு திடலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர் முரசொலி மாறன் பூங்காவில் முடிவுற்ற திட்டபணிகளையும், பல்வேறு புதிய திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 3.95 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், 22.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, 45 லட்சம் செலவில் ஒரு முடிவற்ற பணியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். குறிப்பாக சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர் முரசொலி மாறன் பூங்காவில் 8.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முரசொலி மாறன் பூங்காவை மறு சீரமைக்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி அதற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.
அதே போல வார்டு 64ல் புதிய ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் மற்றும் சமையல் கூடமானது 1.40 கோடி ரூபாயில் மேற்கொள்ள உள்ள பணிகளையும், வார்டு 64 ல் புதிய பல்நோக்கு மையக் கட்டிடமானது ரூபாய் 28.20 லட்சங்களில் மேற்கொள்ளும் பணிகளையும், வார்டு 64 ல் புதிய பல்நோக்கு மையக் கட்டிடமானது ரூபாய் 31 லட்சத்தில் மேற்கொள்ளும் பணிகளையும், வார்டு 67 ல் புதிய நீத்தார் மண்டபத்தில் 1.96 கோடி ரூபாய் செலவில் மேற்ககொள்ளும் பணிகளையும், வார்டு 64 முதல் 78 வரை புதிய LED தெரு மின் விளக்குகளை பொறுத்தும் பணிகளானது, 9.99 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது. அதற்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, வெற்றியழகன் மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஸ் குமார் மற்றும் துறை சார்ந்த ஆணையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.