அரசியல் காரணங்களால் சாதிவாரி கணக்கெடுப்பை தட்டி கழிக்கிறார் முதல்வர் - அன்புமணி குற்றச்சாட்டு!
தர்மபுரியில் பாமக கொள்கை பரப்புச் செயலாளர் பாரி மோகன் இல்ல திருமண
நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். ஏற்கனவே தந்தை மகன் ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கட்சி பிளவு பட்டு இருக்கும் பட்சத்தில் தற்போது அன்புமணிக்கு கொடுத்த கெடு முடிந்துள்ள நிலையில் இன்று தன்னுடைய நிலை குறித்து அறிவிப்பாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மறுத்துவிட்டார். இதற்கு முன்னதாக திருமண மேடையில் தமிழ் வழி நாகரிகப்படி ஐயர் இல்லாமல் மந்திரம் ஓதாமல் திருமணத்தை உறுதிமொழி ஏற்று நடத்தி வைத்தார்.
அதனை தொடர்ந்து மேடையில் பேசிய அவர்,
“ மதுவை விட மிக ஆபத்தானது போதை பழக்கம். அதனால் பெற்றோர்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும். பிள்ளைகளை கண்காணிப்பது பெற்றோர்களின் கடமை. போதை பொருட்களை ஒழிப்பது எங்களின் கடமை, இந்தியாவிலேயே போதை பழக்கம் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு. சாதி வாரிய கணக்கெடுப்பு சாதிய பிரச்சனை கிடையாது. தெரு நாய்கள் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு வைத்திருக்கும் முதல்வர், மகளிர் உரிமைத் தொகைக்கு கணக்கெடுப்பு எடுக்கும் முதல்வர் சாதி வாரிய கணக்கெடுப்பு எடுப்பதற்கு அதிகாரம் இல்லை என தெரிவிப்பதுதான் வேதனை என்றார்.
அரசியல் காரணங்களால் தமிழக முதல்வர் சாதிவாரிய கணக்கெடுப்பை தட்டி கழிக்கிறார். சாதி வாரிய கணக்கெடுப்பு எடுக்க வில்லை என்றால் அதற்கு பெயரை சமூக நீதி கணக்கெடுப்பு என மாற்றி வைத்தாவது கணக்கு எடுக்க வேண்டும். சாதியை முன்னிறுத்தி கட்சிப் பொறுப்புகளை வழங்குவதற்கு மட்டும் சாதி தேவைப்படுகிறது இரண்டு மாதத்தில் முடிக்க வேண்டிய இந்த கணக்கெடுப்பை எடுப்பதற்கு தமிழக முதல்வருக்கு மனம் வரவில்லை அவர் ஏன் பயப்படுகிறார் என தெரியவில்லை”
என்றார்.