“முதலமைச்சர் தான் பகல் கனவு காண்கிறார்… திமுகவுக்கு சரிவு… அதிமுகவிற்கு செல்வாக்கு…” - #EPS பேச்சு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்பதாகவும், மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு சரிவும், அதிமுகவுக்கு செல்வாக்கும் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வனவாசி பகுதியில், நங்கவள்ளி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியம், வனவாசி பேரூர் சார்பில் அதிமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த கூட்டத்தின் மேடையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
“ரூ.565 கோடி மதிப்பீட்டில் 100 ஏரிகள் நிரப்பும் திட்டத்தை கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வந்தேன். அதன் ஒரு பகுதியை தொடங்கி வைத்தேன். ஒரே ஆண்டில் முடிவு பெற வேண்டிய இந்த திட்டத்தை 41 மாதமாக திட்டத்தை முடக்கி வைத்துள்ளனர். ரூ.42 கோடியில் வனவாசி பகுதியில் பிரம்மாண்டமான பாலிடெக்னிக் கல்லூரி கொண்டு வந்தேன். நீட் தேர்வு ரத்து செய்வதற்கான ரகசியம் எங்களிடம் உள்ளது என்றார்கள். ஆனால் இதுவரை அந்த ரகசியமும் கண்டுபிடிக்க முடியவில்லை.
அதிமுக ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக் கனவு நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக 7.5% உள் இடஒதுக்கீடு கொண்டு வந்து சட்டமாக நிறைவேற்றப்பட்டது. அதன் காரணமாக 3440 பேர் மருத்துவர் மற்றும் பல் மருத்துவராகின்றனர். இதுபோல் திமுகவில் ஏதாவது சாதனையை சொல்ல முடியுமா? நங்கவள்ளியில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்கினோம். சாலை விரிவாக்கம் செய்து சிறப்பான சாலையை அமைத்தோம்.
தமிழ்நாடு முழுவதும் சிறப்பான தார் சாலை அமைத்து தந்தோம். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் தார் சாலைகள் அதிகம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரியே கூறியுள்ளார்.
தலைவாசல் பகுதியில் ரூ.1000 கோடியில் 1000 ஏக்கரில் பிரம்மாண்டமான கால்நடை பூங்கா கட்டித் தந்தோம். கட்டி முடிக்கப்பட்டு இரண்டரை ஆண்டு காலம் முடிவு அடைந்து விட்டது. முதற்கட்டமாக கால்நடை மருத்துவக் கல்லூரியை நானே திறந்து வைத்தேன். மற்ற பணிகள் முடிந்தும் இதுவரை திறந்து வைக்கவில்லை. திறந்து வைத்தால் அதிமுகவிற்கு நல்ல பெயர் கிடைக்கும் என்பதால் திறக்கப்படவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் நானே திறந்து வைப்பேன். விவசாயிகளுக்கு பயன் அளிக்கக்கூடிய திட்டத்தை முடக்கி வைத்துள்ளனர். இதில் என்ன அரசியல்? இவை அனைத்தும் மக்களின் வரி பணம் தானே. இந்த திட்டம் மூலம் விவசாயிகளுக்கு வருமானம் இரட்டிப்பாகும்.
நாமக்கலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது நாமக்கல்லுக்கு நிறைய திட்டம் கொண்டு வந்தோம் என்று கூறினார். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் தான் அவை அனைத்தும். ரூ.40 லட்சத்திற்கு நான்கு திட்டங்களை கூறுகிறார். அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டிலேயே நாமக்கல்லுக்கு தான் அதிகமான திட்டங்களை செயல்படுத்தினோம். ஒரு முதலமைச்சர் என்னவென்று தெரியாமல் பேசுகிறார். இனிமேலாவது தெரிந்து பேசுங்கள்.
நான் தமிழ்நாடு முழுவதும் எங்கு சென்றாலும் என்னென்ன திட்டம் எங்கு எங்கு செய்தேன் என்று என்னால் சொல்ல முடியும்.
நான் கனவு காண்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் அவர் தான் பகல் கனவு காண்கிறார். மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு சரிவும் அதிமுகவுக்கு செல்வாக்கும் ஏற்பட்டுள்ளது. திமுகவுக்கு செல்வாக்கு இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டிக் கொள்கிறார்”
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.