சிதம்பரம் நடராஜர் கோயில் - மார்கழி ஆருத்ரா தரிசன விழா கொடி ஏற்றத்துடன் தொடக்கம்!
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழா இன்று (டிச.18) கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆருத்ரா என்பது திருவாதிரை நட்சத்திரத்தை குறிக்கும். ஆருத்ரா தரிசனம் என்பது சேந்தனார் வீட்டுக்கு சிவபெருமான் களி உண்ண சென்ற தினம் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் அன்று ஆகும். இந்த நாளையே ஆருத்ரா தரிசன விழாவாக கொண்டாடப்படுவதாக புராணங்களில் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் : தொடரும் கனமழை – குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு!
சிதம்பரம் நடராஜர் கோயில் சன்னதிக்கு எதிர்ப்புறத்தில் உள்ள கொடிமரத்தில் பஞ்ச மூர்த்திகள் முன்னிலையில் உற்சவ ஆச்சாரியார் மீனாட்சி நாத தீட்சிதர் கொடியினை ஏற்றி விழாவை தொடங்கி வைத்துள்ளார்.
தொடர்ந்து, கொடி மரத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. இந்த கொடியேற்று நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆருத்ரா தரிசன விழா 11 நாட்கள் நடைபெற உள்ளது. மேலும் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 26 ஆம் தேதியும், 27 ஆம் தேதி மார்கழி ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது.