சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா! பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
சிதம்பரம் நடராஜர் கோயிலில் பூஜைகள், வழிபாட்டு முறைகள் மற்றும் பகர்தர்களின்
தரிசனத்துக்கு இடையூறு இல்லாமல் ஆருத்ரா தரிசன விழாவை சுமூகமாக நடத்த
பாதுகாப்பு வழங்கும்படி, கடலூர் மாவட்ட காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் டிசம்பர் 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை
மார்கழி ஆருத்ரா தரிசன மகோத்சவம் நடைபெற உள்ளது. இந்த விழாவின் போது கனக சபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி அளித்த அரசாணை அமல்படுத்த
காவல்துறையினர் உதவி கோரி அறநிலையத்துறை இணை ஆணையர், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு டிசம்பர் 8ஆம் தேதி மனு அளித்துள்ளார்.
பூஜை வழிபாடுகளுக்கும், சடங்குகளுக்கும் எந்த இடையூறும் இல்லாமல், பக்தர்கள்
அமைதியாக தரிசனம் செய்வதற்கு காவல்துறை பாதுகாப்பு கேட்டு மனு
அளிக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக கனக சபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய பிறப்பித்த
அரசாணை அமல்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பொது
தீட்சிதர்கள் குழு சார்பில் அதன் செயலாளர் சிவராம தீட்சிதர் மூலம் சென்னை உயர்
நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, ஆருத்ரா உற்சவத்தின் போது,
தீட்சிதர்களின் பூஜைகள் மற்றும் வழிபாட்டுகளுக்கும், பக்தர்களின் அமைதியான
வழிபாட்டிற்கும் எந்த இடையூறும் ஏற்படாமல், சுமூகமாக விழாவை நடத்த உரிய
பாதுகாப்பை வழங்கும்படி கடலூர் மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த வழக்கை, கோவில் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு
முன் பட்டியலிடும்படியும் உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு நீதிபதி அறிவுறுத்தி
உள்ளார்.