#Chhattisgarh | பாதுகாப்பு படையினரின் என்கவுன்ட்டரில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!
சத்தீஷ்கரில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளது. நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேடுதல் நடவடிக்கையின் போது அவ்வப்போது பாதுகாப்பு படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெறும்.
அந்த வகையில்,சத்தீஸ்கரின் பிஜாப்பூா் மாவட்டத்தில் கங்களூர் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக மத்திய ஆயுதக் காவல்படை (சிஆா்பிஎஃப்) மற்றும் ‘கோப்ரா’ கமாண்டோ பிரிவு ஆகியோருடன் மாநில காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
நக்சலைட்டுகள் பதுங்கி இருந்த இடத்தை பாதுகாப்பு படையினர் கண்டறிந்த நிலையில் இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 8 நக்சலைட்டுகள் உயிரிழந்தனர். இவர்களின் உடல்கள் மீட்கப்பட்டதை அடுத்து அந்த பகுதியில் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், நக்சலைட்டுகள் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு சத்தீஸ்கரில் மட்டும் 219 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.