#ChennaiRains | ட்ரோன் மூலம் உணவு விநியோகிக்க ஒத்திகை!
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்து, குடிநீர், உணவு வழங்க தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ட்ரோன்களின் ஒத்திகை நிகழ்வு ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு பகுதியில் நகர்ந்து தெற்கு வங்கக்கடல் மத்திய பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் இன்று அதிகாலை வரை கனமழை பெய்து வந்தது.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்றும் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. ஆனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பில்லை என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : சென்னை | “அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவசம்” – முதலமைச்சர் #MKStalin அறிவிப்பு!
இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ட்ரோன் மூலம் உணவு, தண்ணீர் பாட்டில்களை விநியோகம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஒத்திகை சென்னை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா முன்னிலையில் நடத்தப்பட்டது. மேலும், சென்னை முழுவதும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் தேங்கிய தண்ணீர் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.