மிரட்டும் மிக்ஜாம் புயல் - மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக மழை பதிவு!
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் அதி கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 230மிமீ மழை பதிவாகி உள்ளது.
வங்க கடல் பகுதியில் கடந்த 27 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. பின்னர் இது தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது. அதனை தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் (டிச.3) நேற்று புயலாக வலுவடைந்து. இந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் கிழக்கு தென்கிழக்கு திசையில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து அதிகரிப்பு!
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற்று, சென்னையில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டது. மணிக்கு பத்து கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து இப்புயல் நெல்லூர்- மசூலிப்பட்டிணம் இடையே கரையை கடக்க உள்ளதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதி கனமழை பெய்து வருகிறது.
அதன்படி, நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், விஐடி சென்னை, தரமணி, வளசரவாக்கம், பெருங்குடி, முகலிவாக்கம்,அம்பத்தூர், தேனாம்பேட்டை, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 230 மிமீ மழை பதிவாகி உள்ளது.