"விரைவில் சென்னையில் புதிய ஸ்கைலைன்" - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!
சென்னை விரைவில் ஒரு புதிய ஸ்கைலைனைக் காணும் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னையில், அதிநவீன நகர்ப்புற ஏர் மொபிலிட்டி (UAM) சூழல் அமைப்பை உருவாக்குவது குறித்த கருத்தரங்கத்தை TIDCO நடத்தியது. இதில் பாதுகாப்பான மற்றும் செயல்திறனுள்ள நகர்ப்புற விமான போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு, வழிகாட்டல் மற்றும் கண்காணிப்பு பற்றிய விவாதங்கள் நடைபெற்றது.
நகர்ப்புற ஏர் மொபிலிட்டி (UAM) எனப்படும் விமான டாக்சிகளைப் பயன்படுத்தி நகரங்களுக்குள் பயணிகள் மற்றும் சரக்குகளைக் கொண்டு செல்வதற்கான ஒரு வகையான விமானப் போக்குவரத்து ஆகும்.
சென்னையில் தற்போது உள்ள பொது போக்குவரத்து திட்டங்களுடன் சேர்த்து நகர்புற ஏர் மொபிலிட்டி செயல்படுத்துவது தொடர்பான சாத்தியக் கூறுகள் குறித்து பல்வேறு துறைகளின் கருத்துகளை தொழில்துறை கேட்டு வருகிறது.
இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் முடிவடைவதை அடுத்து தொழில்துறை சார்ந்த பணிகள் மேற்கொள்வது தொடர்பாக அதிநவீன நகர்ப்புற ஏர் மொபிலிட்டியை சுட்டிக்காட்டி X தளத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
அதில், “பல புதிய முனைகளில் இப்போது வேலை செய்யத் தொடங்கினேன். சென்னை விரைவில் ஒரு புதிய ஸ்கைலைனைக் காணும். மேலும் அதன் அடுத்த அவதாரத்திற்கு ஸ்மார்ட் மொபிலிட்டி முக்கிய அம்சமாக உள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.