சென்னை - காலையில் வாட்டி வதைத்த 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்! இரவில் சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த மழை!
சென்னையில் இன்று காலை முதலே 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் வாட்டிவந்த நிலையில், இரவில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் இன்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. நண்பகலில் வெயில் மேலும் அதிகரித்த நிலையில், இன்று சென்னையில் 100.22 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
இந்நிலையில், இரவு 9 மணி அளவில் சென்னையின் முக்கிய பகுதிகளான சென்ட்ரல், எழும்பூர், ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், தியாகராய நகர், அண்ணாநகர், முகப்பேர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, மீனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. இதேபோன்று புறநகர் பகுதிகளான தாம்பரம், வண்டலூர், மதுரவாயல், திருவேற்காடு, பூவிருந்தவல்லி, தாம்பரம், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
தமிழகத்தில் ஜூலை 9 வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சென்னை மற்றும் புறநகரைப் பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடியலேசான மழைபெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டிருந்தது.