சென்னை | 14 வயது சிறுவன் ஓட்டிய கார் மோதி விபத்து - முதியவர் உயிரிழப்பு!
சென்னை வடபழனி பகுதியைச் சேர்ந்தவர் ஷாம். இவர் நேற்று காரை வீட்டிற்கு முன் நிறுத்திவிட்டு தனது 14 வயது மகனிடம் சாவியை கொடுத்து கார் மீது கவர் போடுமாறு கூறினார். ஆனால் சிறுவன் தனது நண்பர்களை காரில் ஏற்றிக்கொண்டு குமரன் நகர் மெயின் ரோடு வழியாக அதிவேகமாக சென்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ, சாலையில் நடந்துச் சென்ற முதியவர் மற்றும் இரு சக்கர வாகனம் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
மேலும் இந்த விபத்தில் முதியவர் மற்றும் ஆட்டோவில் இருந்த இரண்டு நபர்கள் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் உடனடியாக படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் சிறுவர்களின் பெற்றோர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டு, காரை பறிமுதல் செய்தனர்.
காரை இயக்கிய 14 வயது சிறுவனின் தந்தை ஷாம் மீது பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மோட்டார் வாகன சட்டம் உட்பட மூன்று பிரிபுளின்ன் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் ஷாமை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அப்போது அவரை வரும் 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் விபத்தை ஏற்படுத்திய சிறுவனை எச்சரித்து ஜாமினில் விடுவித்தனர். இதற்கிடையே, மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் இன்று காலை சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.